இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றத்தால் நாட்டில் அசாதாரணமான சூழல் நிலவியது. இதனால், 18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒரு வாரம் நிறுத்தப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதையடுத்து பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்பினர். இன்னும் 12 லீக் மற்றும் இறுதிப்போட்டி உள்பட 4 பிளே-ஒவ் சுற்று என மொத்தம் 16 போட்டிகளை நடத்த வேண்டி உள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டன. இதன் காரணமாக ஐ.பி.எல். போட்டியை மீண்டும் தொடங்க இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதையொட்டி ஐ.பி.எல். நிர்வாக குழு உறுப்பினர்களும், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும் நேற்று ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி, கடந்த 9-ஆம் திகதி லக்னோவில் நடைபெற இருந்த பெங்களூரு – லக்னோ போட்டியில் இருந்து தொடர் தொடங்கும் எனவும், வருகிற 16 அல்லது 17-ஆம் திகதி போட்டி தொடர் மீண்டும் தொடங்கி விடும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. தங்கள் அணி வீரர்களை திரும்ப அழைக்கும்படி 10 அணி நிர்வாகங்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய போட்டிக்கான அட்டவணை இன்று அவர்களிடம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
மேலும், மீதமுள்ள போட்டிகள் அனேகமாக 3 இடங்களில் நடத்தப்படும். இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று மற்றும் வெளியேற்றுதல் நடத்தும் இடத்தில் (ஐதராபாத்) மாற்றம் இல்லை. ஆனால் இறுதிப்போட்டியை கொல்கத்தா ஈடன்கார்டனில் நடத்துவதில் சிக்கல் உள்ளது. புதிய அட்டவணைப்படி மே.31 அல்லது ஜூன்.1-மே் திகதி இறுதிப்போட்டி நடக்க வாய்ப்புள்ளது.
அந்த சமயத்தில் கொல்கத்தாவில் மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதனால் இறுதிப்போட்டி கொல்கத்தாவில் இருந்து அகமதாபாத்துக்கு மாற்றப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.