நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சித் தேர்தலில் வன்னி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வெவ்வேறு கட்சிகளில் போட்டியிட்டு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் நேற்று (10) கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
முசலி, மாந்தை மேற்கு, மன்னார், வெண்கலச்செட்டிகுளம் ஆகிய பிரதேச சபைகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்திலும், மன்னார் நகர சபை, முல்லைத்தீவு பிரதேச சபை ஆகியவற்றிற்கு ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் தராசு சின்னத்திலும், வவுனியா மாநகர சபைக்கு இலங்கை தொழிலாளர் கட்சியின் கங்காரு சின்னத்திலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒன்பது உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தனர்.
மன்னார் நகரில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸ் மன்னார் மாவட்ட அமைப்பாளரும், கட்சியின் யாப்புச் சீர்திருத்தப் பணிப்பாளருமான சட்டத்தரணி ஹுனைஸ் பாருக், மன்னார் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் இஸ்மாயில் இஸ்ஸதீன், உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பங்கு பற்றிச் சிறப்பித்தனர்.