வடக்கு மாகாணத்தில் 5,940 ஏக்கர் காணிகளை சுவிகரிப்பதற்கு அரசாங்கம் வர்த்தமானி வெளியிட்டுள்ள நிலையில் காணி உரிமையாளர்கள் அவற்றுக்கு உரிமை கோருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான இலவச சட்ட ஆலோசனை வழங்கும் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட வெற்றிலைக்கேணி றம்போ விளையாட்டுக்க மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) காலை ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தலைமையில் இக் கூட்டம் இடம் பெற்றது.
அரசாங்கத்தினால் காணி நிர்ணய கட்டளை சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ் 28. 03 .2025யில் 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டு இருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கிலே மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை, மூன்று மாத காலத்துககுள் எவரும் உரிமை கோரதவிடத்து அவை அரச காணிகளாக பிரகடனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ் அறிவித்தல் தொடர்பில் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்ததுடன் அதனை உடனடியாக மீளப்பெறுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வெற்றிலைக் கேணியில் உள்ள பொது மண்டத்தில் கடந்த மாதமும் இலவச சட்ட ஆலோசனை வழங்கும் கூட்டம் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
அதன் போது பத்துக்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் கலந்து கொண்டு சட்ட ஆலோசனைகளை வழங்கினர்.
தற்போது மீண்டும் ஞாயிற்றுக்கிழமை (25) வெற்றிலைக் கேணியில் உள்ள றம்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் சட்ட உதவி வழங்கும் கூட்டம் இடம்பெற்றது.
இதில் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் கலந்து கொண்டு சட்ட உதவி வழங்கியதுடன் யாழ். பல்கலைக்கழக சட்டபீட மாணவர்களும் இதில் இணைந்து கொண்டிருந்தனர்.
மேலும் பெருமளவான காணி உரிமையாளர்களும் இக் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன் பெற்றனர். மேலும் இவ் இலவச சட்ட உதவி வழங்கும் கூட்டமானது கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைதீவுகளிலும் காணி சுவீகரிக்கப்படும் இடங்களில் இடம்பெறும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.