யாழ். செம்மணி, சித்துப் பாத்தி மனிதப் புதைகுழியைக் குற்றப் பகுதி என்று குறிப்பிட்டு, அதனை மேலும் 45 நாள்கள் அகழ்வதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
இதேநேரம், குறித்த பகுதி சட்டவிரோ தமான – இரகசியமான புதைகுழியாக இருக்க லாம் என்றும், அடையாளப்படுத்தப்பட்ட பகுதியையும் தாண்டி குற்றப் பகுதி இருக்கலாம் என்றும் சட்ட மருத்துவ அதிகாரி நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட இடத்தை மனிதப் புதைகுழியாக அறிவிக்கக் கோரிய வழக்கு யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் ஏ. ஆனந்த ராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன்போது, சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன், தொல்பொருள் தடயவியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா ஆகியோரின் நிபுணத்துவ அறிக்கைகளில் மூன்று விடயங்கள் இருவராலும் சுட்டிக்காட்டப்பட்டன.
“அகழ்வு நடைபெறும் இடத்தில் 1.6 மீற்றர் அடி ஆழத்திலேயே மனித எலும்பு எச்சங்களை அடையாளப்படுத்தக் கூடியதாக உள்ளது.
குழப்பமான விதத்தில் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன. ஆடை களோ அல்லது தனிப்பட்ட அணிகலன் களோ காணப்படவில்லை.
இது சட்டவிரோதமான – இரகசியமான புதைகுழியாக இருக்கலாம். தற்போது அடையாளம் காணப்பட்ட மனிதஎலும்புக்கூடுகளில் 18 எலும்புக்கூடுகள் பகுதியளவிலும் முழுமையாகவும் அடை யாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 5 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்தும் பல மனித எலும்பு எச்சங்கள் அடையாளப்படுத்தப் பட்டுள்ளன. குறித்த பிரதேசத்தைத் தாண்டியும் குற்றப் பிரதேசம் எனச் சந்தேகிக்கப்படும் பிரதேசமாக இருக்கலாம்.