காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.
நேற்று (20) இந்த டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர நிறைவில் தமது இரண்டாம் இன்னிங்ஸில் ஆடிய பங்களாதேஷ் 177 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. களத்தில் ஆட்டமிழக்காதிருந்த பங்களாதேஷ் தலைவர் ஷன்டோ 56 ஓட்டங்கள் பெற்றிருக்க, முஷ்பிகுர் ரஹீம் 22 ஓட்டங்களுடன் இருந்திருந்தார்.
இன்று (21) இந்தப் போட்டியில் இலங்கைக்கு சவால் நிறைந்த வெற்றி இலக்கு ஒன்றினை நிர்ணயிக்க ஆட்டத்தினை பங்களாதேஷ் தொடர்ந்தது. எனினும் மழையின் காரணமாக போட்டி தடைப்பட்டதுடன் அதன் பின்னர் இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசிய நஜ்முல் ஹொசைன் ஷன்டோவின் ஆட்டத்தோடு, பங்களாதேஷ் வீரர்கள் 285 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தமது ஆட்டத்தினை இடைநிறுத்தினர்.
பங்களாதேஷ் துடுப்பாட்டம் சார்பில் நஜ்முல் ஹொசைன் ஷன்டோ 3 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 125 ஓட்டங்கள் பெற, முஷ்பிகுர் ரஹீம் 49 ஓட்டங்கள் எடுத்தார்.
இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக்க 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க, பிரபாத் ஜயசூரிய மற்றும் மிலான் ரத்நாயக்க ஆகியோர் ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றினர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 296 ஓட்டங்களை அடைய பதிலுக்கு இரண்டாம் இன்னிங்ஸில் ஆடிய இலங்கை வீரர்கள் தடுமாறியதோடு, போட்டியின் ஆட்டநேரம் நிறைவடையும் போது 72 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டனர்.
இலங்கைத் துடுப்பாட்டம் சார்பில் பெதும் நிஸ்ஸங்க 24 ஓட்டங்கள் பெற்றிருக்க, பங்களாதேஷ் அணியின் தரப்பில் தய்ஜூல் இஸ்லாம் 3 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் ஆட்டநாயகனாக பங்களாதேஷ் அணியின் தலைவர் நஜ்முல் ஹொசைன் ஷன்டோ தெரிவானார்.