கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இலங்கை – தென்னாபிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையில் நடைபெற்று முடிந்திருக்கும் ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை 5 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் இந்த முக்கோண ஒருநாள் தொடரில் தாம் ஆடிய முதல் போட்டியில் தோல்விக்குப் பின்னர் முதல் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றனர்.
இந்திய – இலங்கை மற்றும் தென்னாபிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்கெடுக்கும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கையை இந்தியா 9 விக்கெட்டுக்களால் வீழ்த்திய நிலையில், இலங்கை இன்று (02) தென்னாபிரிக்காவினை எதிர் கொண்டது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை வீராங்கனைகள் முதலில் துடுப்பாடும் வாய்ப்பினை தென்னாபிரிக்காவிற்கு வழங்கினர். இதன்படி தென்னாபிரிக்க வீராங்கனைகள் முதலில் துடுப்பாடி 50 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 235 ஓட்டங்களை எடுத்தனர்.
தென்னாபிரிக்க துடுப்பாட்டம் சார்பில் அன்னி டெர்க்ஸன் ஆட்டமிழக்காது 61 ஓட்டங்கள் எடுக்க, லாரா குட்டால் 46 ஓட்டங்கள் பெற்றார். இலங்கை பந்துவீச்சில்
மால்கி மாதரா 4 விக்கெட்டுக்களையும், தேவ்மி விஹாங்கா 3 விக்கெட்டுக்களையும் சுருட்டினர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 236 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய இலங்கை மகளிர் அணி குறித்த வெற்றி இலக்கினை 46.3 ஓவர்களில் பொறுப்படான ஆட்டத்தோடு 5 விக்கெட்டுக்களை இழந்து 237 ஓட்டங்களுடன் அடைந்தது.
இலங்கை மகளிர் அணியின் வெற்றியினை உறுதி செய்த ஹர்சிதா சமரவிக்ரம தன்னுடைய நான்காவது அரைச்சதத்தோடு 77 ஓட்டங்கள் எடுக்க, கவீஷ டில்ஹாரி 61 ஓட்டங்கள் பெற்றார். அத்துடன் ஹாசினி பெரேரா 42 ஓட்டங்கள் பெற்றுக் கொடுத்து உதவினார்.
தென்னாபிரிக்க பந்துவீச்சில் நொன்குலுலேக்கோ லாபா 2 விக்கெட்டுக்கள் சாய்த்தும் அவரது பந்துவீச்சு உபயோகமானதாக அமையவில்லை. போட்டியின் ஆட்டநாயகியாக ஹர்சிதா சமரவிக்ரம தெரிவானார்.