அலுமினியம், ஸ்டீல் மற்றும் இலகுரக வாகனங்கள் மீதான அமெரிக்க வரிகள் கனேடிய ஒட்டோமொபைல் துறையைத் தொடர்ந்து பாதித்து வருவதால், கனடாவின் மூன்று பாரிய வாகன உற்பத்தி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் ஒரு அவகாசத்தை கேட்டுள்ளனர்.
தற்போதைய லிபரல் அரசாங்கத்தின் பூஜ்ஜிய-உமிழ்வு வாகன உற்பத்தி (ZEV) ஆணையை நீக்கும் நோக்கில் இந்த வாரம் அவர்கள் பிரதமர் மார்க் கார்னியைச் சந்தித்தனர்.
பூஜ்ஜிய-உமிழ்வு வாகன உற்பத்தியை மேற்கொள்வது அவர்களின் நிறுவனங்களை முடக்கும் மற்றும் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புக்களை இழக்க செய்யும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளைத் தொடர கார்னி கடந்த வார இறுதியில் கனடாவின் டிஜிட்டல் சேவை வரியை ரத்து செய்தார். இவ்வாறான நிலையில் ஆட்டோமொபைல் துறைக்கு உதவும் நோக்கில் ZEV ஆணையை நீக்க முடியுமா என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கனடாவில் விற்கப்படும் புதிய பூஜ்ஜிய-உமிழ்வு வாகனங்களின் உற்பத்தி (ZEV) எண்ணிக்கை அடுத்த ஆண்டுக்குள் 20 சதவீதத்தையும், 2030க்குள் 60 சதவீதத்தையும், 2035க்குள் 100 சதவீதத்தையும் எட்ட வேண்டும் என்று அரசாங்கத்தின் ஆணையின்படி கோரப்பட்டுள்ளது.
கார்னி உடனான சந்திப்பை மேற்கொண்ட கனடிய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பிரையன் கிங்ஸ்டன், மின்சார வாகன ஆணையை தற்போதுள்ள நிலையில் நிறைவேற்ற முடியாது என்று கூறினார்.
அமெரிக்க வரிகள் கனடா ஏற்றுமதி செய்யும் வாகனங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளதாகவும், இது தொழில்துறையின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கிங்ஸ்டன் மற்றும் பிற தொழில்துறை நிறுவனங்கள் கூறுகின்றன.