2001ஆம் ஆண்டு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜாவை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஆயுதக்குழுவான ஈ.பி.டி.பி. நாரந்தனை தம்பாட்டி பகுதியில் வைத்து படுகொலை செய்ய முயற்சித்தபோதும், இராணுவம் ஆனையிறவு பகுதியில் வைத்து படுகொலை செய்ய முயற்சித்தபோதும், படுகாயங்களுடன் உயிர் தப்பி இறக்கும் வரையில் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து போராடினார். கட்சியின் கொள்கையுடன் இதயச்சுத்தியில் செயற்படுவது மாவை. சேனாதிராசாவுக்கு அளிக்கும் உயரிய கௌரவமாகும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) நடைபெற்ற காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சோ. சேனாதிராஜா, கோசல நுவன் ஜயவீர, டொனால்ட் திசாநாயக்க, சூரியபெரும ஆகியோருக்கான அனுதாப பிரேரணையில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, இலங்கைத் தீவின் இன முரண்பாடுகளை உச்சம் பெறச்செய்த தனிச்சிங்களச் சட்டம் 1956இல் அறிமுகம் செய்யப்பட்டு கிடப்பிலிருந்த நிலையில் 1961ஆம் ஆண்டு அதனை வடக்கு – கிழக்கிலும் நடைமுறைப்படுத்த முனைந்தமைக்கு எதிராக 1961 ஜனவரி 21இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ் அரசுக் கட்சியின் 7வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கமைய 1961 பெப்ரவரி 20இல் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் மாவை சேனாதிராசாவின் போராட்ட வாழ்வு ஆரம்பமானது.
பின்னர், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினராக, ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளராக காலப்பெறுமதி மிக்க அரசியல் பணியாற்றிய இவர் 1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு மகசின், வெலிக்கடை உள்ளிட்ட எட்டு சிறைச்சாலைகளில் ஏழு ஆண்டுகள் தடுத்துவைக்கப்பட்டார்.
1989ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இலங்கை தமிழ் அரசின் மூத்த தலைவரும் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மறைவின் பின்னர் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி ஈழத்தமிழர்களின் உரிமைக்குரலாக பாராளுமன்றத்தின் உள்ளும் வெளியும் ஒலிக்கத் தொடங்கினார்.
ஈழ விடுதலைப் போராட்ட எழுச்சியின்போதும் அதன் வீழ்ச்சியின் பின்னான தமிழ்த் தேசிய அரசியல் தளத்திலும் மாவை சேனாதிராசாவினது பணிகளின் கனதி மிகப்பெரியது.
ஒடுக்குமுறைக்கும் இன அழிப்புக்கும் உள்ளாக்கப்பட்ட ஓர் இனத்தின் அரசியல் குரலாக இருந்து பன்னாட்டு அரசியல் ஒழுங்கிலும் ஜெனீவா அரங்கிலும் தன்னாட்சி உரிமை கோரும் ஈழத்தமிழரின் அரசியல் பயணத்துக்கு அங்கீகாரம் தேடும் வரலாற்றுப் பணியையே அவர் தன் வாழ்வாக்கிக்கொண்டவர்.
வட்டுக்கோட்டை தீர்மானம் தொடக்கம் இன்றைய நாள் வரையும் தமிழ் மக்கள் அவாவி நிற்கும் தீர்க்கம் மிகு அரசியல் தீர்வினை எமக்குக் கிடைத்த ஜனநாயக சந்தர்ப்பங்களில் எல்லாம் எமது இனம் ஒருமித்து வெளிப்படுத்தியே வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் பிற்பாடு பன்னாட்டு சமூகத்துடன் இணைந்து தமிழ் மக்களுக்கு அவர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்யக்கூடிய அர்த்தமுள்ள அரசியல் தீர்வு நோக்கிய பயணத்தில் உலகத்தின் எதிர்பார்ப்பை அங்கீகரித்து இலங்கை அரசாங்கத்தின் போருக்குப் பிந்திய நிலைப்பாட்டாலும் சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையினாலும் பின்னடைவுகளை எதிர்கொள்ள நேரிட்டபோதும் அமரர் மாவை சேனாதிராசா அனைத்து வித சமாதான முன்முயற்சிகளுக்காகவும் மிகக் கடுமையாக உழைத்திருந்தார்.
போருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்டிருந்த தமிழ் அரசு என்ற அரசியல் ஆலமரம் கிளிநொச்சி மண்ணிலும் விழுதெறிந்து வளர்ந்ததில் மாவை அண்ணனின் பங்கே விரவியிருக்கிறது. தமிழ்த் தேசியத்தின் இருப்பையும் இனத்துவ உரித்தையும் அவாவி நிற்கும் ஓர்அரசியல் கட்சியின் பயணம் தடம் மாறாததாக இருக்கவேண்டுமெனில், அது முழுக்க முழுக்க மக்கள்மயப்பட்டதாக மக்களின் மன உணர்வுகளுக்கு நெருக்கமானதாக இருக்க வேண்டுமென்பதை தனது அரசியல் அனுபவத்தால் உற்றுணர்ந்த அவர் ஈழத்தமிழ் சமூகத்தின் இருபெரும் சக்திகளான இளைஞர்களையும் மகளிரையும் சமதளத்தில் இணைத்துப் பயணிக்கும் எல்லா வகைப் பிரயத்தனங்களிலும் ஈடுபட்டிருந்தார். அத்தகைய முதிர்ச்சி மிக்க அவரது செயற்பாடுகளின் பயன்விளைவினால்தான் தமிழ்த் தேசியம் அதன் கொள்கை இறுக்கமும் கொதிநிலையும் தாழாது அடுத்த சந்ததியிடத்தே இன்று கையளிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவராக 2014ஆம் ஆண்டு தெரிவான காலத்திலிருந்து இறக்கும் வரை அவரது அரசியல் செயற்பாடுகள், மற்றும் தீர்மானங்கள் தெளிவானதாக இருந்தன. சமாதான முயற்சிகளுக்கு முன்னின்று செயற்பட்டார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் பயணம் தடம் மாறாமல் மக்களுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார். இதன் காரணமாக தமிழ் தேசிய உணர்வு இன்று பிற தலைமுறைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை மற்றும் தமிழ் தேசியம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இதய சுத்தியுடன் செயற்படும் தரப்புடன் ஒன்றிணைந்து செயற்படுவது அன்னாருக்கு வழங்கும் உயரிய கௌரவமாகும்.
2001.11.28ஆம் திகதியன்று யுத்த நடுப்பகுதியின் போது தீவகத்தில் அரசியல் பிரச்சார நடவடிக்கையில் மாவை சேனாதிராசா தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடச் சென்றபோது அப்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஆயுதக்குழு நாரந்தனை தம்பாட்டி பகுதியில் வைத்து அவர் மீது கொலை வெறி தாக்குதலை நடத்தியது. டக்ளஸ் தேவானந்தாவின் ஆயுதக்குழுவின் கொலைவெறி தாக்குதலினால் ஏறம்பு பேரம்பலம், யோகசிங்கம் கமல்ரோம் ஆகியோர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
மாவை சேனாதிராசா, சிவாஜிலிங்கம் உட்பட 28 பேர் படுகாயமடைந்தனர். இந்த கொலைவெறி தாக்குதலில் இருந்தும் சேனாதிராசா தப்பித்து மக்களுக்காக சேவையாற்றினார். அதேபோல் ஆனையிறவு பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிர்பிழைத்தார். இரண்டு முறை உயிர் பிழைத்து இறக்கும் வரை தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார் என்றார்.