அடுத்தவாரம் கனேடிய பிரதமர் மார்க் கார்னியை வெள்ளை மாளிகையில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று (01) புதன்கிழமை தெரிவித்தார்.
இருப்பினும் இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பிற்கான திகதி இதுவரை உறுதி செய்யப்படவில்லை. செவ்வாயன்று தொலைபேசியில் இருவரும் உரையாடிய போது ஓர் ஒப்பந்தம் செய்துகொள்வோம் என கார்னி தன்னிடம் கூறியதாக அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.
தேர்தல் வெற்றிக்கு பின்னர் கார்னி இங்கிலாந்து மன்னர் சார்ல்ஸ், உக்ரைன் ஜனாதிபதி விலாடிமர் செலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் அண்டோனியா கோஸ்டா ஆகியோருடனும் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இதன்போது உக்ரைனில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியப்பாடுகள் மற்றும் இந்த ஆண்டு கனடாவின் G7 தலைமைத்துவம் ஆகியவை குறித்து தானும் கார்னியும் விவாதித்ததாக செலன்ஸ்கி கூறினார். அத்துடன் உக்ரைன் பாதுகாப்பிற்கு கனடா அளித்த பங்களிப்புகளுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
கனேடிய பிரதமர் தனது வெற்றி உரையில் ட்ரம்ப் உடன் அமர்ந்திருக்கும்போது இரண்டு இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு இடையிலான எதிர்கால பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உறவைப் பற்றி விவாதிப்பதாக இருக்கும் என்று கூறினார்.
தேர்தல் காலத்தில் கொன்சர்வேடிவ் மற்றும் லிபரல் கட்சிகள் அமெரிக்க ஜனாதிபதியின் வரி அச்சுறுத்தல்களை வெகுவாக விமர்சித்தார்கள் அதிலும் கொன்சர்வேடிவ் கட்சியினர் ட்ரம்ப் நிர்வாகத்தை அதிகம் வெறுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் ஒருமுறை அமெரிக்க ஜனாதிபதி கார்னியை மிகவும் நல்ல மனிதர் என்று விவரித்தார், மேலும் கனடாவுடன் சிறந்த உறவை வைத்திருப்பார் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் கூறினார். இதனடிப்படையில் இரு தலைவர்களுக்குமிடையிலான அடுத்தவார சந்திப்பு குறித்து கனேடியர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.