அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடனான சந்திப்பை தொடர்ந்து பிரதமர் மார்க் கார்னி நேற்றைய தினம் கனடாவின் மாகாண முதல்வர்களுடன் மெய்நிகர் வழியான சந்திப்பை நடத்தினார். இச்சந்திப்பின் போது பிரதமரின் வெற்றிக்கு வாழ்துகளைத் தெரிவித்த முதல்வர்கள் ட்ரம்ப் உடனான சந்நிப்பின் போது நிதானமாக செயற்பட்டதற்காக பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
கனடா-அமெரிக்க உறவுகள் மற்றும் ட்ரம்பின் தற்போதைய வர்த்தகப் போர் குறித்து இரு தலைவர்களும் நேருக்கு நேர் விவாதித்தது இதுவே முதல் முறை. இருவரும் செவ்வாயன்று வெள்ளை மாளிகையில் சுமார் இரண்டு மணி நேரம் ஒன்றாகச் செலவிட்டனர், இதில் ஓவல் அலுவலகத்தில் கெமராவின் முன் சுமார் அரை மணி நேரம் கலந்துரையாடினர்.
மெய்நிகர் வழியான இச்சந்திப்பில், ஒன்ரோறியோ மாகாண முதல்வர் டக் போர்ட் கனடாவின் அனைத்து மாகாணங்களினதும் ஒற்றுமையை வலியுறுத்தி இது நாட்டை ஒன்றிணைப்பதற்கான நேரம் என்று குறிப்பிட்டதுடன் ட்ரம்ப் கனேடிய பொருட்களுக்கு எதிராக வரிகளை விதிக்கத் தொடங்கியதிலிருந்து தான் ‘Team Canada’ என்ற கோட்பாட்டை முன்னிறுத்தி வருவதையும் நினைவூட்டினார்.
பிரதமர் கார்னி மேற்கு மாகாணங்களுடன் மிகச்சிறப்பான உறவுவை முன்னெடுத்து வருவதாக டக் போர்ட் மேலும் கூறினார். அதேநேரம் பிரதமர் Saskatchewan மற்றும் Alberta மாகாணங்கள் மீது சிறிதளவேனும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நான் எப்போதும் கூறுவேன் ஒற்றுமையாக நின்றால் நிமிந்து நிற்போம். பிரிந்தால் வீழ்வோம். அதுதான் இன்றைய எனது செய்தி புதிய பிரதமர் அதைப் புரிந்துகொண்டார் என்று நினைக்கிறேன் என்றார் ஒன்ரோரியோ முதல்வர்.
இச்சந்திப்பில், தேசிய நலன் சார்ந்த கட்டுமானத் திட்டங்கள் குறித்தும் முதல்வர்களுடன் விவாதித்ததாகவும், கனேடிய தினத்திற்குள் மத்தியரசின் வர்த்தகத் தடைகளை நீக்குவதற்கான தனது உறுதிப்பாட்டையும் பிரதமர் மீளவும் உறுதிப்படுத்தியதாகவும் தெரியவருகின்றது.