மருந்து விநியோகஸ்தர்கள் முறையாக பணியாற்றாமையின் காரணமாக மருந்து இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் நேரடியாக தலையிட்டு இராஜதந்திர மட்டத்தில் கலந்துரையாடி வெளிநாடுகளிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்ய நேர்ந்துள்ளதாகவும் நாட்டுக்கு தேவையான மருந்துகளைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக 07 நாடுகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
எனவே, எதிர்வரும் 03 – 06 மாதங்களுக்கு மருந்துகளை களஞ்சியப்படுத்தி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (29) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
‘‘குறித்த தொகை மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக இலக்கங்களை அடிப்படையாகக் கொண்டு கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது. சில மாதங்களுக்கு முன்னர் எடுத்த கணக்கெடுப்புகளை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. வைத்திய விநியோகப்பிரிவினால் முன்னெடுக்கப்படும் மருந்து மீளாய்வு கலந்துரையாடல்களில் இதுதொடர்பில் கலந்துரையாடியுள்ளோம்.
ஒரு சந்தர்ப்பத்தில் இன்சுலின் தொடர்பில் பிரச்சினை இருந்தது. இன்சுலினுக்கான விலைமனுவை பெற்றுக்கொண்ட விநியோகஸ்தர் குறித்த சந்தர்ப்பத்தில் தேவையான தொகையை பெற்றுக்கொடுக்காமையின் காரணமாகவே அந்த பிரச்சினை ஏற்பட்டிருந்தது. அதனால், ஒருசில நோயாளர்களுக்கு இன்சுலின் வழங்கும் அளவை குறைக்க வேண்டி ஏற்பட்டது.
கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி மூன்றரை மாதங்களுக்கு தேவையான இன்சுலினை நாட்டுக்கு கொண்டுவந்தோம். மேலும் இரண்டு மாதங்களுக்கு தேவையான இன்சுலின் தொகை நாட்டை வந்தடையும். மருந்து விநியோகத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. இல்லை என்று கூறமுடியாது. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட கொள்முதல்களின் பிரச்சினைகளை தற்போது நாம் எதிர்கொள்கிறோம். எனவே, நாங்கள் இவற்றை மீளாய்வு செய்து கொள்முதலுக்கான கோரிக்கையை முன்வைத்ததுமே நாட்டை வந்தடையாது.
பொதுவாக விலைமனு கோரல் நடவடிக்கைகளுக்கு 03 – 06 மாதங்கள் தேவைப்படும். உற்பத்திக்கும் 03 04 மாதங்களாவது ஆகும். அதனடிப்படையில் பார்த்தால், அண்ணளவாக 09 மாதங்களாவது தேவைப்படும். அதற்கிடையில் ஒருசில மருந்து தொகை நண்கொடையாகவும் நாடுகளுக்கிடையிலான இணக்கப்பாட்டின் அடிப்படையில் பெற்றுக்கொள்ள முயற்சிப்போம். தேவையான மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக 07 நாடுகளுடன் கலந்துரையாடி வருகிறோம்.
இலங்கையிலுள்ள விநியோகஸ்தர்களையும் புறந்தள்ளிவிட்டு வெளிநாடுகளிலிருந்து மருந்துகளை நேரடியாக பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. விநியோகஸ்தர்களையும் அந்த நாடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ள நேர்ந்துள்ளது. விநியோகஸ்தர்கள் முறையாக பணியாற்றாவிட்டால் நாங்கள் தலையிட்டு இராஜதந்திர மட்டத்தில் கலந்துரையாடி அந்த நாடுகளிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்ய நேர்ந்துள்ளது.
எனவே, எதிர்வரும் 03 – 06 மாதங்களுக்கு மருந்துகளை களஞ்சியப்படுத்தி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். எனவே, விநியோகஸ்தர்கள் அவர்களின் தேவைக்கேற்ப மருந்து சந்தையை நிர்வகிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காது. ஆகவே, மருந்து விநியோகஸ்தர்களும் தற்போதைய சந்தர்ப்பத்தில் பழைய முறையில் செயற்படாமல் அவசியத்தை அறிந்து அதிகபட்ச வேகத்தில் மருந்து விநியோகத்தை மேற்கொள்ள வேண்டும். அதனை செய்யாதவர்கள் தொடர்பில் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை பதிவு நடைமுறைகளின்போது கவனம் செலுத்தப்படும்.
அதேபோன்று, நாடுகளுக்கிடையில் மருந்துகளை பெற்றுக்கொள்வதற்காக நேரடியாக தலையிடுவோம். இடைக்கிடை ஏற்படும் மருந்துத் தட்டுப்பாட்டுக்கு பதிலளித்துக்கொண்டிருக்கிறோம். அதேபோல், தனியார் சந்தையிலும் அவசியம் இருக்கிறது. அந்த தனியார் துறையினருக்கு தேவையான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு அந்த நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கியுள்ளோம். நாங்கள் பெயரிட்டுள்ள 862 மருந்து வகைகளில் ஓரிரு மருந்துகளுக்கு சிலநேரங்களில் தட்டுப்பாடு ஏற்படக்கூடும். மேலும், மருந்து விநியோகப் பிரிவை மாத்திரம் அவதானித்து விட்டு மாகாண மட்டத்திலுள்ள மருந்து இருப்புகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். இறக்குமதி என்ற நிலைப்பாட்டை உருவாக்கி அதிக விலையில் மருந்தை இறக்குமதி செய்வதற்கான தந்திரமும் மருந்து தட்டுப்பாடு என்ற பிரசாரத்தில் இருக்கிறது’’ என்றார்.