மன்னார் மாவட்டத்தில் புதிதாக முன்னெடுக்கப்பட்டுவரும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் இன்று (28) நடைபெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர்.
இக்கூட்டமானது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனின் நெறிப்படுத்தலின் கீழ், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உப்பாலி சமரசிங்க தலைமையில் இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியுதீன், காதர் மஸ்தான், ரவிகரன், முத்து முஹம்மட், ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது மாவட்ட அபிவிருத்தி சார்ந்த பல்வேறு விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன. குறிப்பாக, மன்னார் மாவட்டத்தில் புதிதாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி திட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், மன்னாரில் கனிய மணல் அகழ்வில் ஈடுபடுவதற்காக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கனிய மணல் அகழ்வுக்கான நடவடிக்கைகளை எதிர்த்து குரல் கொடுத்ததோடு, மணல் அகழ்வினால் மன்னார் தீவில் ஏற்படப்போகும் அபாய நிலை தொடர்பாகவும் விளக்கமளித்தார்.
இதேவேளை இன்றைய தினம் நடைபெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கனிய மணல் அகழ்வு குறித்து முடிவு எடுக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டபோதும் இந்த கூட்டத்தில் கனிய மணல் அகழ்வு குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
மேலும் இம்மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
இதில் பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், முப்படை பிரதானிகள், அரச பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.