பாப்பரசர் பிரான்சிஸ், கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு நேற்று (21) தனது 88ஆவது வயதில் காலமானார்.
இன்று பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு உலகம் துக்கம் அனுசரிக்கும் வேளையில் நேற்று முன்தினம் (20) அவரின் கடைசி ஈஸ்ரர் செய்தி உலக அமைதிக்கான கருத்துக்களை தாங்கி நிற்கிறது.
இந்த செய்தி உலகிற்கு அவரின் ஒரு ஆழமான பிரியாவிடையாக மாறியுள்ளது. அவரது ஈஸ்ரர் செய்தியில்,
“எவ்வளவு பெரிய மரண தாகம், கொலைக்கான தாகம், நம் உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் பல மோதல்களில் நாம் ஒவ்வொரு நாளும் காண்கிறோம்! பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது, குடும்பங்களுக்குள்ளும் கூட, எவ்வளவு வன்முறையை நாம் காண்கிறோம்! பாதிக்கப்படக்கூடியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீது சில நேரங்களில் எவ்வளவு அவமதிப்பு இழைக்கப்படுகிறது!.
இந்த நாளில், நாம் அனைவரும் புதிதாக நம்பிக்கை வைத்து, நம்மை விட வித்தியாசமானவர்கள், அல்லது தொலைதூர நாடுகளிலிருந்து வந்து, அறிமுகமில்லாத பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகள் மற்றும் கருத்துக்களைக் கொண்டு வருபவர்கள் உட்பட மற்றவர்கள் மீது நமது நம்பிக்கையைப் புதுப்பிக்க விரும்புகிறேன்! ஏனென்றால் நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள்.
பலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலில் உள்ள கிறிஸ்தவர்களின் துன்பங்களுக்கும், அனைத்து இஸ்ரேலிய மக்களுக்கும் பலஸ்தீன மக்களுக்கும் எனது நெருக்கத்தை வெளிப்படுத்துகிறேன். உலகம் முழுவதும் யூத-விரோத சூழல் வளர்ந்து வருவது கவலையளிக்கிறது. ஆனால் அதே நேரத்தில், காசா மக்களையும், குறிப்பாக அதன் கிறிஸ்தவ சமூகத்தையும் நான் நினைத்துப் பார்க்கிறேன்.
அங்கு பயங்கரமான மோதல் தொடர்ந்து மரணத்தையும் அழிவையும் ஏற்படுத்தி, வருந்தத்தக்க மனிதாபிமான நெருக்கடியை உருவாக்குகிறது. போரிடும் தரப்புகளிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். போர் நிறுத்தத்தை ஏற்படுத்தவும், பிணைக்கைதிகளை விடுவிக்கவும், அமைதியின் எதிர்காலத்தை விரும்பும் பட்டினியால் வாடும் மக்களுக்கு உதவவும் அழைப்பு விடுகிறேன்.
மத்திய கிழக்கில் உள்ள கிறிஸ்தவ சமூகங்களுக்காகவும், லெபனான், ஏமன் மற்றும் சிரியாவில் நெருக்கடியில் உள்ளவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்.
உயிர்த்தெழுந்த கிறிஸ்து போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு, ஈஸ்ரர் பரிசு அமைதியை வழங்குவாராக, மேலும் நீதியான மற்றும் நீடித்த அமைதியை அடைவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளைத் தொடர அனைத்து தரப்பினரையும் ஊக்குவிக்கட்டும்.
தெற்கு காகசஸ், மேற்கு பால்கன், ஆப்பிரிக்கா, மியான்மர் மற்றும் வன்முறை, அரசியல் அமைதியின்மை மற்றும் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட பிற பகுதிகளில் மோதல்கள் மற்றும் துன்பங்களால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட, உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு அமைதி, தீர்வு மற்றும் நம்பிக்கைக்காக பிரார்த்தனை செய்கிறேன்.
“நமது உலகில் அரசியல் பொறுப்புள்ள பதவிகளில் இருப்பவர்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். கிடைக்கக்கூடிய வளங்களை ஏழைகளுக்கு கொடுத்து உதவவும், பசியை எதிர்த்துப் போராடவும், வளர்ச்சியை ஊக்குவிக்கும் வேண்டும். இவை அமைதியின் ஆயுதங்கள். மரணத்தின் விதைகளை விதைப்பதற்குப் பதிலாக, எதிர்காலத்தைக் கட்டமைக்கும் ஆயுதங்கள்! மனிதநேயக் கொள்கை நமது அன்றாட நடவடிக்கைகளின் அடையாளமாக ஒருபோதும் இருக்கத் தவறக்கூடாது.
பாதுகாப்பற்ற பொதுமக்கள் மற்றும் பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் மனிதாபிமானப் பணியாளர்களைத் தாக்குவதன் மூலம் ஆன்மாவும் மனித கண்ணியமும் தாக்கப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்த ஆண்டில், போர்க் கைதிகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஈஸ்ரர் ஒரு பொருத்தமான சந்தர்ப்பமாக அமையட்டும் என்று தெரிவித்துள்ளார்.