முக்கியமான தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கும் இந்த நாட்களில் பாப்பரசரின் இறுதிச்சடங்கில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என கூறிய பிரதமர் மார்க் கார்னி கனடாவின் பிரதிநிதியாக சனிக்கிழமை வத்திக்கானில் நடைபெறும் பாப்பரசரின் இறுதிச் சடங்கில் கனடாவின் சார்பாக ஆளுநர் நாயகம் மேரி சிம்சன் பங்கேற்பார் என்று தெரிவித்துள்ளார்.
ஆளுநர் நாயகத்துடன் செல்லும் கனடாவின் தூதுக்குழுவில் அவரது கணவர் வைட் பிரேசர் மற்றும் செனட் சபாநாயகர் ரெய்மெண்ட கெக்னி ஆகியோரும் இணைந்து கொள்வார்கள் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை சென் பீடர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும் இறுதிச் சடங்குகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி விலாடிமீர் செலன்ஸ்கி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
குறித்த நிகழ்வில் டொரண்ரோவின் பேராயர் கர்தினால் பிரான்க் லியோ உள்ளிட்ட கனடாவின் பல்வேறு ஆயர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இவர்களுடன் கியூபெக்கின் சர்வதேச உறவுகள் அமைச்சர் மார்டின் பிரையன் ஆகியோர் இறுதிச் சடங்கில் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்.
கனடா 2023 ஆம் ஆண்டில், 2013 ஆம் ஆண்டு போப்பாண்டவர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் அரிய நடவடிக்கையை மேற்கொண்ட pope emeritus Benedict XVI இன் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவதற்காக கனடா தனது தூதரகப் பணித் தலைவரான போல் கிப்பார்ட் என்பவரை ஹொலி சீயிற்கு அனுப்பியிருந்தது. அதே போன்று 2005 ஆம் ஆண்டில், பாப்பரசர் ஜோன் போல் II இன் இறுதிச்சடங்கில் கனடாவின் பிரதிநிதியாக அப்போதைய பிரதமர் போல் மார்டின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸடீபன் ஹெப்பர் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.