பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டின்பேரில், யூடியூப் சேனலை நடத்திய இந்தியாவின் ஹரியானாவைச் சேர்ந்த இளம் பெண் உட்பட ஆறு பேரை இந்திய பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இந்தியாவில் பிரபலமான பயண யூடியூப் செனலை நடத்தி வரும் ஜோதி மல்ஹோத்ரா என்ற 33 வயது பெண்ணும் அடங்குவார்.
இந்திய இராணுவத் தகவல்களை அவரும் அவரது குழுவும் பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டதாக இந்திய பாதுகாப்புப் படையினர் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஜோதி மல்ஹோத்ரா 2023 ஆம் ஆண்டில் இரண்டு முறை பாகிஸ்தானுக்கு விஜயம் செய்ததாகவும், புதுடில்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் பணியாற்றும் எஹ்சான்-உர்-ரஹீம் என்ற ஊழியருடன் நெருங்கிய உறவுகளை வளர்த்துக் கொண்டதாகவும் இந்திய பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் ரஹீம் இந்திய பாதுகாப்புப் படையினரால் சட்டவிரோத வெளிநாட்டவராகக் கருதப்பட்டதாகவும், 24 மணி நேரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், 2023 ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயணத்தின் போது அந்த நாட்டின் பாதுகாப்புப் படைகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளைச் சந்தித்ததாகவும், பின்னர் இந்தியாவுக்குத் திரும்பி அந்த அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததன் மூலம் இந்திய எதிர்ப்புத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கியதாகவும் அவர் இந்தியப் பாதுகாப்புப் படைகளிடம் ஒப்புக்கொண்டார்.
உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட ரஹீமை பலமுறை சந்தித்ததாகவும் அவர் இந்திய பாதுகாப்புப் படையினரிடம் ஒப்புக் கொண்டார்.
இந்தியாவில் உள்ள இடங்கள் பற்றிய முக்கியமான தகவல்களை பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதாக ஜோதி மல்ஹோத்ரா இந்திய பாதுகாப்புப் படையினரிடம் வாக்குமூலமளித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, ஜோதி மல்ஹோத்ராவைத் தவிர, பஞ்சாபின் மலேர்கோட்லாவைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விசாவுக்கு விண்ணப்பிக்க பாகிஸ்தானுக்குச் சென்ற அவர், அங்கு ரஹீம் என்ற நபரைச் சந்தித்து அடையாளம் கண்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
காலப்போக்கில், ரஹீம் என்ற நபர் குசலா என்ற இந்தப் பெண்ணுக்கு அவ்வப்போது பணம் கொடுத்து வந்ததை இந்திய பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன