ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.
பஞ்சாப் 7 போட்டிகளில் ஆடி 5 வெற்றி (குஜராத், லக்னோ, சென்னை, கொல்கத்தா, பெங்களூருவுக்கு எதிராக), 2 தோல்வி (ராஜஸ்தான், ஜதராபாத் அணியிடம்) கண்டுள்ளது. பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு நடந்த முந்தைய போட்டியில் பஞ்சாப் 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை சாய்த்தது. மழையால் 14 ஓவர்களாக குறைக்கப்பட்ட அந்த போட்டியில் பெங்களூரூவை 95 ஓட்டங்களில் கட்டுப்படுத்திய பஞ்சாப் அணி 12.1 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்தது. ஒருநாள் இடைவெளியில் இரு அணிகளும் மறுபடியும் மல்லுக்கட்டுகின்றன.
பஞ்சாப் அணியில் துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் ஸ்ரேயாஸ் அய்யர் (257 ஓட்டங்கள்), பிரியான்ஷ் ஆர்யா (232), நேஹல் வதேரா, பிரம்சிம்ரன் சிங்கும், பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், மார்கோ யான்சென்னும் நல்ல நிலையில் உள்ளனர்.
பெங்களூரு 7 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி (கொல்கத்தா, சென்னை, மும்பை, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக), 3 தோல்வியை (குஜராத், டெல்லி, பஞ்சாப் அணிகளிடம்) சந்தித்துள்ளது. அந்த அணியில் துடுப்பாட்டத்தில் விராட் கோலி (249 ஓட்டங்கள்), பில் சால்ட் (212), அணித்தலைவர் ரஜத் படிதார் (209), டிம் டேவிட் வலுசேர்க்கின்றனர். ஜிதேஷ் ஷர்மா, லிவிங்ஸ்டன் நல்ல பங்களிப்பை அளித்தால் மிடில் வரிசை மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார், குருணல் பாண்ட்யா, யாஷ் தயாள் மிரட்டக்கூடியவர்கள்.
தங்களது சொந்த மைதானத்தில் அரங்கேறிய பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த பெங்களூரு அணி அதற்கு சூட்டோடு சூடாக பதிலடி கொடுக்க பகீரத முயற்சி மேற்கொள்ளும் என்பதால் இந்த போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.