தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“காஷ்மீரில் இருந்து வெளியாகும் செய்திகள் ஆழ்ந்த கவலையளிக்கின்றன. தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது. உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் மீண்டு வரவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் எங்கள் முழு ஆதரவும் ஆழ்ந்த அனுதாபங்களும் உண்டு. எங்கள் இதயங்கள் உங்கள் அனைவருடனும் உள்ளன” இவ்வாறு ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியாவின் பஹல்காமில் நடந்த கொடூரமான தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என் மனைவி உஷாவும் நானும் எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். சமீப நாட்களாக, இந்த நாட்டின் அழகையும் அதன் மக்களையும் கண்டு நாங்கள் வியந்து போயுள்ளோம். இந்த கொடூரமான தாக்குதலுக்கு இரங்கல் தெரிவிக்கும் வேளையில், எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவர்களுடன் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.