எமது நாட்டில் மாத்திரம் தினமும் 520 மில்லியன் ரூபாய் புகைத்தல் பாவனைக்காக செலவிடப்படுகின்றது. அத்தோடு, கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கததிற்கு சிகரட்டினால் கிடைத்த வரி வருமானம் ரூபா பில்லியன் 92.9 ஆகும். ஆனால் அதே ஆண்டு அரசாங்கத்திற்கு புகைத்தலினால் ஏற்பட்ட சுகாதார செலவீனங்கள் ரூபா பில்லியன் 214 ஆகும். இது எமது நாட்டின் அரசாங்கத்திற்கு ஏற்படுத்தப்படுகின்ற பாரிய பொருளாதார நட்டமாகும் என மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள தேசிய நூலக ஆவணங்கள் சேவைகள் சபையில் புதன்கிழமை (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் இதனை தெரிவித்துள்ளது. எமது நாட்டில், புகைத்தல் பாவனையினால் பொதுசுகாதாரம், பொருளாதாரம், மற்றும் சூழல் ஆகிய அனைத்திற்கும் பல்வேறு வகையான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.
2020ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சர்வதேச புகைத்தல் கணக்கெடுப்பின் படி உலகளாவிய ரீதியில் 19.4 வீதமானோர் புகைத்தலில் ஈடுபடுகின்றனர் (3.2 மில்லியன் பேர்), இவ் ஆய்வறிக்கையில் இலங்கையில் புகைத்தலில் ஈடுபடுவோரின் சதவீதம் 9.1வீதமாக கணிப்பிடப்பட்டுள்ளது (1.5 மில்லியன் பேர்) என மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
எமது நாட்டில் இடம்பெறுகின்ற புகைத்தல் விழிப்புணர்வு செயற்றிட்டங்களின் பிரதிபலனாக புகைத்தல் பாவனையின் வீதம் படிப்படியாக குறைவடைந்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் புகைத்தல் பாவனையினால் எமது சாட்டில் சுமார் 20,000 பேர் அகால மரணிகின்றனர், இந்நிலைமையானது நாட்டின் சுகாதார அமைப்பிற்கு பாதிப்புக்களை ஏற்படுத்துவதுடன் பொருளாதார இழப்புக்களையும் ஏற்படுத்துகின்றது.
மேலும் தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கு புகைத்தல் பிரதான முதன்மை காரணியாக விளங்குகின்றது, இலங்கையில் ஏற்படுகின்ற மரணங்களுள் 83வீதமான மரணங்கள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்ற மரணங்களாகும். இவை ஒரு நாட்டின் சுகாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தலாகும்.
புகைத்தல் பாவனையினால் பாரியளவான பொருளாதார தாக்கங்கள் ஏற்படுகின்றன.
தினமும் சுமார் 4.9 மில்லியன்கள் சிகரட் வடிப்பான்களும் (cigarette filters) ஒரு வருடத்திற்கு சுமார் 1.8 பில்லியன் சிகரட் வடிப்பான்களும் பிளாஸ்டிக் கழிவுகளாக சூழலுடன் இணைகின்றன. இதனூடு 7000 நச்சுப்பொருட்கள் சூழலுடன் இணைகின்றமையும் குறிப்பிடத்தக்கது, இதனால் சூழல் மாசுபடுவதுடன் பல்லுயிர் பெருக்கத்திற்கும் அச்சுறுத்தலாக அமைகின்றது.
“சிகரெட்டுகளுக்கான வரியைக் குறைப்பது அதிக சிகரெட் கடத்தலுக்கு வழிவகுக்கும் என மக்கள் நினைக்கிறார்கள், இது முற்றிலும் உண்மையல்ல” என தேசிய புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதாக தேசிய அதிகாரசபை தலைவர் டாக்டர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை புகையிலைக் கட்டுப்பாட்டில் முன்னேற்றம் அடைந்து வருகின்றதொரு நாடாகும். பல்வேறு சமூக செயற்பாடுகளினால் புகையிலை நிறுவனத்தின் தலையீடுகள் வெளிக்கொணரப்படுகின்றன மேலும் அவை சமூகக் குழுக்களினால் நிறுத்தப்படுகின்றன. 2003ஆம் ஆண்டு புகையிலைக்கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கத்தை எமது நாட்டிற்குள் அங்கீகரித்தமையும், 2006ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மதுபானம் மற்றும் புகையிலை தொடர்பான தேசிய அதிகார சபை சட்டமும் புகையிலைக் கட்டுப்பாடில் இந்த சாதகமான நிலைமைக்கு பெரிதும் பங்களிக்கின்றன.
இலங்கையின் தவறான சிகரட் வரிவிதிப்புக் கொள்கையின் விளைவாக, 2024 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற்றிருக்க வேண்டிய ரூபா 6 பில்லியன்கள் இழக்கப்பட்டுள்ளது. வெறிட்டா ஆய்வுகளின் படி, சிகரட்டுகளுக்கான வரி-விலை விகிதம் 15 கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது பாரியளவில் சரிவை சந்தித்துள்ளது. அவ்விகிதாசாரம், தற்போது 67வீதம் முதல் 69வீதம் வரை காணப்படுகின்றது, இது உலக சுகாதார ஸ்தாபனத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 75வீதத்தை விடவும் குறைவான அளவு என்பது குறிப்பிடத்தக்கது.