கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற யுகுஊ ஆகிய கிண்ணம் சவூதி அரேபியா 2026க்கான 3ஆவது தகுதிகாண் சுற்றின் முதலாம் கட்ட கால்பந்தாட்டப் போட்டியில் சர்வதேச கால்பந்தாட்ட தரவரிசையில் 166ஆவது இடத்திலுள்ள சைனீஸ் தாய்ப்பே அணியை அதிர்ச்சியில் ஆழ்த்தி இலங்கை அணி 3 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியீட்டியது.
சைனீஸ் தாய்ப்பே அணிக்கு எதிராக சிநேகபூர்வ போட்டியில் இலங்கை வெற்றிபெற்றுள்ளபோதிலும் சர்வதேச போட்டி ஒன்றில் அவ்வணியை இலங்கை வெற்றிகொண்டது இதுவே முதல் தடவையாகும்.
ஆதவன் ராஜமோகன், டிலொன் டி சில்வா, வசீம் ராஸீக் ஆகியோர் 9 நிமிட இடைவெளியில் 3 கோல்கனைப் போட்டு இலங்கையை வெற்றி அடையச் செய்தனர்.
இந்தப் போட்டியின் முதலாவது பகுதியின் 20ஆவது நிமிடத்திலிருந்து இலங்கை வீரர்கள் திறமையாகவும் சிறந்த புரிந்துணர்வுடனும் விளையாடி சைனீஸ் தாய்ப்பே அணிக்கு நெருக்கடியைக் கொடுத்தனர்.
ஆனால், இலங்கை அணியினர் இலகுவான 3 கோல் போடும் வாய்ப்புகள் உட்பட 5 வாய்ப்புகளைக் கோட்டைவிட்டனர்.
இடைவேளையின்போது இரண்டு அணிகளும் கோல் எதனையும் போட்டிருக்கவில்லை.
இடைவேளையின் பின்னர் 10 நிமிட இடைவெளியில் இலங்கை அணியினர் 3 கோல்களைப் போட்டனர்.
போட்டியின் 49ஆவது நிமிடத்தில் டிலொன் டி சில்வா இடது புறத்திலிருந்து பரிமாறிய பந்தைக் கட்டுப்படுத்திய ஆதவன் ராஜமோகன் முதலாவது கோலைப் போட்டு இலங்கை அணியை முன்னிலையில் இட்டார்.
நான்கு நிமிடங்கள் கழித்து வசீம் ராஸீக் பரிமாறிய பந்தை டிலொன் டி சில்வா கோலினுள் புகுத்தி இலங்கையின் இரண்டாவது கோலை போட்டார்.
போட்டியின் 58ஆவது நிமிடத்தில் சைனீஸ் தாய்ப்பே கோல் எல்லையில் ஏற்பட்ட தடுமாற்றத்தை நன்கு பயன்படுத்திக்கொண்ட வசீம் ராஸீக் அலாதியான கோல் ஒன்றைப் போட இலங்கை 3 – 0 என முன்னிலை அடைந்தது.
போட்டியின் 70ஆவது நிமிடத்தில் பரிமாறப்பட்ட ப்றீ கீக் பந்தை மாற்றுவீரர் ஹுவாங் வெய் சியேஹ் கோலாக்கி சைனீஸ் தாய்ப்பே அணிக்கு ஆறுதலைக் கொடுத்தார்.
இலங்கையின் பின்கள வீரர்களினதும் கோல்காப்பாளரினதும் கவனக் குறைவே அந்த கோல் போடப்படுவதற்கு காரணமானது.
போட்டியின் கடைசிக் கட்டத்தில் சைனீஸ் தாய்ப்பே வீரர்கள் கோல் போடுவதற்கு கடுமையாக முயற்சித்தனர்.
ஆனால், பின்கள வீரர்களும் அணித் தலைவரும் கோல் காப்பாளருமான சுஜான் பெரேராவும் அவற்றைத் தடுத்து நிறுத்தினர்.
போட்டி முடிவடைய ஓரிரு நிமிடங்கள் இருந்தபோது இலங்கை அணி கோல் எண்ணிக்கையை அதிகரிக்க எடுத்த முயற்சிகள் கைகூடாமல் போனது.
இன்றைய போட்டியில் இலங்கையின் முதல் பதினொருவர் அணியில் சுஜான் பெரேரா (தலைவர் – கோல்காப்பாளர்), அனுஜன் ராஜேந்திரம், கெரட் கிறிஸ்டோபர், செமுவெல் டுரன்ட், டிலொன் டி சில்வா, மணிமெல்தூர லியோன், வசீம் ராஸீக், குளோடியோ மெத்தாயஸ், ஜெக் ஹிங்கேர்ட், ஆதவன் ராஜமோகன், ஜேசன் தயாபரன் ஆகியோர் இடம்பெற்றனர்.
வசீம் (63 நி.), டிலொன் (70 நி.), ஹிங்கேர்ட் (90 10 4 நி.) ஆகியோருக்குப் பதிலாக மாற்று வீரர்களாக முறையே வேட் டெக்கர், ஒலிவர் ஜேம்ஸ், எஸ். ஸ்டீவன் அன்தனி ஆகியோர் விளையாடினர்.