வடக்கு கிழக்கில் சில தமிழ் அரசியல்வாதிகள் தங்களது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்காக தையிட்டி விகாரையை வைத்து அரசாங்கத்துக்கு எதிராக மக்களை திசைத்திருப்தி குழப்புகின்ற அரசியல் நாடகங்களை நிகழ்த்தி கொண்டிருக்கின்றனர். எனவே அரசாங்கத்தை என்னதான் குழப்புகின்ற செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தாலும் நாங்கள் தொடர்ச்சியாக எங்கள் மக்களின் ஆதரவுடன் பயணிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று புதன்கிழமை (11) இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு வைத்தியசாலையில் தற்போது புற்றுநோய் பிரிவில் பல மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவது தொடர்பான பிரச்சினையை சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து அவர் அதனை உடனடியாக தீர்த்து வைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியமைத்து இன்று ஆறு மாதங்களை கடந்து பயணித்துக் கொண்டிருக்கின்றோம் இந்த நாட்டில் கடந்த காலம் மக்கள் பொருளாதார மற்றும் கொரோனாவினால் பல அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
இருந்தபோதும் இன்று தேசிய மக்கள் சக்தி இந்த அரசாங்கத்தை பெறுப்பேற்றதன் பின்னர் நாட்டை கட்டியெழுப்புவதற்கான வழிவகைகளையும் திட்டங்களையும் உருவாக்கிக் கொண்டிருந்தோம். அந்த வகையில் பொருளாதார ரீதியாக நலிவுற்ற மக்களுக்கான பல திட்டங்களை உருவாக்கி அவர்களது வாழ்வை பலப்படுத்துவதற்கான வேலையை செய்து வருகின்றோம்.
ஆனாலும் சில அரசியல்வாதிகள் தங்களது அரசியல் இருப்புக்காக பல தரப்பட்ட குழப்புகின்ற செயற்பாட்டை வடக்கு கிழக்கில் ஏற்படுத்தி வருகின்றனர்.
விசேடமாக தையிட்டி விகாரை தொடர்பான குழப்ப நிலையை அவதானித்து பார்த்தால் குறிப்பிட்ட தினமான போயா தினத்தில் மட்டும் அந்த விகாரை தொடர்பான ஞாபகம் ஏற்படுகின்றது. அதைக்கொண்டு இன்று மக்களை அரசாங்கத்துக்கு எதிராக திசை திருப்புகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் – என்றார்.