டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் 2026 ரி20 உலகக் கிண்ணம், 2027 உலகக் கிண்ணம் (50 ஓவர்) ஆகியவற்றை இலக்கு வைத்து மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளதாக ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் எனக் கேட்டபோதே, ‘வீரகேசரி’ ஒன்லைனுக்கு அவர் இதனைத் தெரிவித்தார்.
இரண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு திறமையையும் உடற்தகுதியையும் பேண வேண்டியுள்ளது எனவும் அவர் கூறினார்.
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டி அடுத்த வருட முற்பகுதியில் இந்தியாவிலும் இலங்கையிலும் கூட்டாக நடைபெறவுள்ளது.
ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணப் போட்டி 2027 அக்டோபர் – நவம்பர் மாதங்களில் ஆபிரிக்கக் கண்டத்தில் நடைபெறவுள்ளது.
‘ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது. ஆனால், 50 ஓவர் உலகக் கிண்ணத்திற்கு இன்னும் 2 வருடங்கள் இருக்கிறது. முதலில் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுதை குறி வைத்து எனது உடற் தகுதியைப் பேணும் அதேவேளை, உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்குபற்றி எனது திறமையையும் வெளிப்படுத்தவேண்டும். எனது திறமையில் தெரிவாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அத்துடன் அவர்கள் என்னுடன் அடிக்கடி கலந்துரையாடுவது எனக்கு மிகுந்த ஆறுதலையும் உற்சாகத்தையும் கொடுக்கிறது. எனவே என்னால் தொடர்ந்து விளையாடக் கூடியதாக இருக்கிறது’ என்றார்.
இன்னும் சில தினங்களில் ஓய்வுபெற உள்ளீர்கள். அதைப் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள் என ஏஞ்சலோ மெத்யூஸிடம் கேட்டபோது,
‘சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நிறைய விடயங்களைக் கற்று திறமையை வெளிப்படுத்தக் கூடியதாக இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அதே மைதானத்தில் எனது 100 ஆவது டெஸ்டைப் பூர்த்திசெய்தேன். அதே மைதானத்தில் எனது கடைசி டெஸ்டில் விளையாடி ஒய்வுபெறுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்’ என்றார்.
பாகிஸ்தானுக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் 2009 ஜூலை மாதம் நடைபெற்ற போட்டி மூலம் டெஸ்ட் அரங்கில் 22 வயது வீரராக அறிமுகமான ஏஞ்சலோ மெத்யூஸ், இதே மைதானத்தில் இதே அணிக்கு எதிராக 2022ஆம் ஆண்டு தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார்.
இதுவரை 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஏஞ்சலோ மெத்யூஸ் 16 சதங்கள், 45 அரைச் சதங்களுடன் 8167 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளார். சிறந்த சகலதுறை வீரரான இவர் 33 டெஸ்ட் விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.