ஜனாதிபதி பொது மன்னிப்பை முறைகேடாகப் பயன்படுத்தி கைதியொருவரை விடுதலை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீதியமைச்சினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் பிரத்தியேக விசாரணை நடத்தப்படும் என நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்பவர் விடுவிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்தின் பின்னணியில் முறைகேடு இருப்பதாகவும் ஜனாதிபதி செயலகம் அளித்த முறைப்பாட்டிற்கமைய குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
அரசியலமைப்பின் 34 (1) பிரிவின் படி, கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.
அதன்படி, சிறைச்சாலை அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகளின் பட்டியல் நீதி அமைச்சுக்கு அனுப்பப்படும்.
இந்தப் பட்டியல் நீதி அமைச்சினால் பரிசீலிக்கப்பட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்படுகிறது. இதற்கமைய ஜனாதிபதியின் அனுமதியுடன், குறித்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்.
சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தால் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு கிடைக்க வேண்டியவர்களின் பெயர் பட்டியலில் 388 கைதிகளின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் அனுராதபுரம் சிறைச்சாலையில் நிதி மோசடி தொடர்பாக சிறையிடப்பட்ட நபரின் பெயர் அந்தப் பட்டியலில் எங்கும் சேர்க்கப்பட்டிருக்கவில்லை.
அதாவது, ஜனாதிபதியால் பொது மன்னிப்புக்காக அனுமதிக்கப்பட்ட 388 பெயர்களில் அந்த நபரின் பெயர் சேர்க்கப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக , “ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சிறைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக” என்ற தலைப்பில் ஜனாதிபதி செயலகம் கடந்த ஆறாம் திகதி (06.06.2025) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடளித்துள்ளது.