பட்டலந்த அறிக்கையை அரசியலுக்காக தூசி தட்டி வெளியில் எடுத்தவர்கள் தமிழர்களுக்கு எதிராக புரியப்பட்ட இன அழிப்பு விவகாரத்தை பகிரங்கமாக கையாள்வதற்கு முன்வர மாட்டார்கள். இதுவும் ஒருவகையான அரசியலாகும்.”
இவ்வாறு சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
“ செம்மணி சமூக புதைகுழியில் தோண்டத் தோண்ட கொலை செய்து புதைக்கப்பட்ட அல்லது உயிரோடு புதைத்து கொல்லப்பட்டோரின் உடல் எச்சங்கள் தனித்தனியாகவும், கூட்டாகவும் அவதானிக்கப்பட்டுள்ளன.
இதற்கான நீதி விசாரணை நடத்தப்படும் என நீதி அமைச்சர் குறிப்பிட்டாலும் அகழ்வு பணிகளும் ஆய்வுகளும் சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப அத்துறையில் சர்வதேச நிபுணத்துவம் கொண்டவர்களால் நடத்தப்பட்டால் மட்டுமே நீதி கிட்டும்.” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி இதற்கான கதவுகளை திறக்குமா? அல்லது நாட்டின் இறைமை எனக் கூறி நீதிக்கான தடைகளை விதிக்குமா? என்பதே எமது கேள்வி.
தற்போது அகழப்படும் செம்மணி சமூக புதைக்குழி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க ஆட்சி காலத்துக்குரியது.
இப்புதைகுழியை மூடி மறைக்கவும் கொலையாளிகளை பாதுகாக்கவும் அக்காலத்தில் சமாதான தேவதையாக காட்சியளித்த சந்திரிக்கா மட்டுமல்ல தேசிய மக்கள் சக்தியாக தற்போது அனுர குமார தலைமையில் பதவியில் இருக்கும் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களும் குற்றவாளி கூண்டில் நிற்க வேண்டியவர்களே.” எனவும் அருட்தந்தை மா சத்திவேல் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது அகழப்படும் சமூக புதைகுழியை விட மேலும் பல சமூக புதைகுழிகள் தமிழர் தாயகத்தில் கண்டு பிடிக்கப்பட்டன. அவற்றிற்கு எல்லாம் விசாரணையை நடத்த எந்த ஒரு ஆட்சியாளர்களும் துணியவில்லை. அகழ்வு மற்றும் ஆராய்வு அறிக்கைகளை எல்லாம் பாதாள கிடங்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. பட்டலந்த அறிக்கையை அரசியலுக்காக தூசி தட்டி வெளியில் எடுத்தவர்கள் தமிழர்களுக்கு எதிராக புரியப்பட்ட இன அழிப்பு, இனப்படுகொலை விடயங்களை பகிரங்கமாக கையாள்வதற்கு முன்வர மாட்டார்கள். அதுவும் அரசியலே.
மனித குலத்துக்கு எதிரான திட்டமிட்ட இன படுகொலை 2009 இறுதி யுத்தத்திற்கு முன்னரும் இலங்கை பேரினவாத ஆட்சியாளர்களால் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தியுடமைக்கு மிக ஆணித்தரமான சாட்சியாகவே செம்மணி சமூக புதைகுழி காட்சி தருகின்றது. இது மனித நேயம் கொண்ட மனசாட்சி உள்ளோரை நிச்சயமாக தட்டி எழுப்போம்.” – என அருட்தந்தை மா சக்திவேல் மேலும் குறிப்பிட்டார்.