இலங்கையின் எந்தவொரு ஆட்சியிலும் சிறுபான்மை கட்சிகளுக்கு உள்வீட்டு அமைச்சரவையில் இடமளிக்கப்படவில்லை. தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலும் அதே நிலை தான். எனவே, அந்த ஆட்சிகளின் போதான மோசடிகளை சிறுபான்மை கட்சிகள் மீது சாட்டுவது அநாகரிகமானதாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவருடைய முகநூல் பக்கத்தில் கீழ்வருமாறு பதிவிட்டுள்ளார்,
“எல்லா நாட்டிலும், எல்லா அரசாங்கங்களிலும் “உள்ளக தலைமை” என்ற ஒன்று இருக்கும். இது சரளமாக “கிச்சன் கபினட் (KC)” என்று சொல்லப்படுகிறது.
ராஜபக்ச அரசில், ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் KCல் இருந்தார்கள்.
ரணில் அரசில் ரணில், சாகல, ரவி, வஜிர, அகில பின்னாளில் மங்கள, மலீக் ஆகியோர் இருந்தனர்.
முன்னாளில் சந்திரிக்கா ஆண்ட போது, அவருடன் மங்கள, எஸ்பி ஆகியோர் இருந்தனர். அவர் மஹிந்தவை தனது KCல் வைக்கவில்லை.
இப்போது அப்படிதான். அனுர அரசின் KCல் அவருடன், டில்வின், பிமல், நளின், விஜித, சுனில், லால் ஆகியோர் உள்ளனர். இதில் ஹரினி இல்லை.
இந்த KCல் அவ்வப்போது, தலைமையின் நம்பிக்கையை பெற்ற அரச அதிகாரிகளும் அவ்வப்போது இருப்பார்கள்.
இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த அரசாங்கங்களில் இடம் பெறும் சிறுபான்மை கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் இத்தகைய KC களில் சேர்த்து கொள்ள படுவதில்லை.
இதுதான் ஆட்சியியல் (Governance) யதார்த்தம்.
ஆகவே, அவ்வப்போது வந்து போகும் அரசுகளில் இடம் பெறும் முறைகேடுகளுக்கு, அவ்வந்த அரசுகளில் இருந்த, இருக்கின்ற அல்லது வெளியில் இருந்து ஆதரவளித்த சிறுபான்மை கட்சி தலைவர்களை குற்றம் சாட்டுவதோ, பதிலளிக்க கூறுவதோ, முதிர்ச்சி அற்ற செயல்.
சிறுபான்மை கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், தாம் பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் சார்பாக எத்தகைய உரிமைகள், சலுகைகள், வாய்ப்புகள், அபிவிருத்திகள், ஆகியவற்றை பெற்று கொடுத்தார்கள் என்று தான் கேள்வி எழுப்ப வேண்டும்.
குறிப்பாக, ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட சிறுபான்மை அமைச்சர்கள் இருப்பார்கள் எனில், அவர்களை பெயர் சொல்லி சாட வேண்டும். இதற்கு மறு பேச்சில்லை.
ஆனால், TPA, SLMC, ACMC மற்றும் TNA போன்ற தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளை, கடந்த கால அரசாங்களின் முறைகேடுகளுக்கு பொறுப்பு ஏற்க சொல்வது அறம் தவறிய சிந்தனை.
இதை சொல்லித்தான், இன்று நாடு முழுக்க, சிறுபான்மை கட்சிகளை அழிக்க, இன்றைய NPP/JVP சதி வலை போடுகிறது. அதன் மூலம் முழு நாட்டையும் சொந்தம் கொண்டாட முயல்கிறது.
ஆனால், உண்மை என்னவென்றால், 2004, 2005, 2010, 2015 ஆண்டுகளில் உருவான சந்திரிக்கா, மஹிந்த, ரணில், மைத்திரி அரசு உருவாக்கங்களுக்கு, உள்ளேயும், வெளியேயும், JVP இருந்தது.
அப்படியானால், அந்த அரசுகளில் நிகழ்ந்த முறைகேடுகளுக்கு JVP யும் பதில் கூற வேண்டும்.
இன்றைய NPP/JVP அரசில் இடம் பெற்றுள்ள, “325 கொள்கலன்கள், பரிசோதனை இல்லாமல் விடுவிக்க பட்டன”, என்ற முறைகேட்டுக்கும், பரவலாக பேசப்படும், “சீனி, “அரிசி”, “உப்பு”, “ஊழல்வாதி ஒரே வாரத்தில் விடுதலை” என்ற முறைகேடுகளுக்கு எல்லாம் NPP அரசில் உள்ள தமிழ், முஸ்லிம் அமைச்சர்களை, எம்பிகளை பலிகடா ஆக்க நாம் முயலவில்லை. அது நியாயம் இல்லை
நான் மேலே பெயர் சொன்ன, இந்த NPP/JVP அரசின் “கிச்சன் கபினட்” உறுப்பினர்கள்தான் இவற்றுக்கு பதில் கூற வேண்டும்.
இந்த அரசியல் விஞ்ஞான பேருண்மையை இந்நாட்டு தமிழ் பேசும் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.”