தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அவர்கள் எங்கிருந்தாலும் தேடிச் சென்று அழிப்போம் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்
ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள தீவிரவாதிகள் தளங்களைத்தான் தாக்கினோம். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பட்டியலில், முக்கிய தீவிரவாதிகள், அவர்கள் வசிக்கும் இடங்கள் மற்றும் செயல்படும் இடங்கள் பற்றிய விவரங்கள் உள்ளன.
ஒபரேஷன் சிந்தூர் முடிவடையவில்லை. பஹல்காம் தாக்குதல் போன்ற சம்பவம் நடந்தால், நாங்கள் பதிலடி கொடுப்போம். தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்தாலும் தேடிச் சென்று அழிப்போம். அதனால், ஒபரேஷன் சிந்தூர் தொடர்கிறது. துப்பாக்கிச் சூடு மற்றும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு மட்டுமே இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தும் என்பதை அறிந்திருந்தோம். மே 10 ஆம் திகதி பாகிஸ்தானின் 8 விமானப்படைத் தளங்களை குறிவைத்து தாக்கினோம். விமான ஓடுதளம், விமான கட்டுப்பாட்டு மையத்தை அழித்தோம். துப்பாக்கிச் சூட்டை நிறுத்த வேண்டும் என்ற கட்டாயத்துக்கு பாகிஸ்தான் இராணுவம் ஆளானதைத் தொடர்ந்து மோதலை நிறுத்த ஒப்புக்கொண்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.