“எனக்குக் கிடைக்க வேண்டிய தேசிய விருது கடைசி நேரத்துல வேற ஒருத்தருக்குப் போச்சு!”

கேரளாவிலிருந்து சென்னைக்கு கூட்டிட்டு வர்றதுக்கு ஆள் இல்லாததால ராஜா சார் கொடுத்த பல வாய்ப்புகளை மிஸ் பண்ணினேன். அதுக்கப்புறம், எனக்குத் திருமணமாகி, இசைப் பயணத்துல சின்ன பிரேக் விழுந்தது

`புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது. இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது’ – எப்போது கண்மூடிக் கேட்டாலும் மனதைக் கிறங்க வைக்கும் பாடல் இது. ‘ஒரு இனிய மனது’, ‘நேற்று இல்லாத மாற்றம்’, ‘ஆத்தங்கர மரமே’, ‘தாமரைப் பூவுக்கும்’, ‘பூப் பூக்கும் ஓசை’, ‘சொட்டச் சொட்ட நனையுது’, ‘பூவுக்குள் ஒளிந்திருக்கும்’, ‘காற்றின் மொழி’ என ஒவ்வொரு பாடலிலும் தன் சர்க்கரைக் குரலால் நம்மை மெஸ்மரிஸம் செய்கிறார் சுஜாதா மோகன். சினிமாவில் 50-வது ஆண்டை நிறைவு செய்திருக்கும் சுஜாதா மோகனுக்கு `பொன்விழா வாழ்த்துகள்’ சொல்லிப் பேசினோம்…

“50 வருடம்ங்கிறது நம்பர்தான். எல்லாமே கடவுள் ஆசீர்வாதம். எங்க குடும்பத்துல, யாருமே பாடகர்கள் கிடையாது. என்னோட அப்பா, தாத்தா எல்லோருமே டாக்டர்ஸ். அம்மா பின்புலமும் அரசியல் பின்னணி கொண்டது. அப்படியிருக்கும்போது, எப்படி 50 வருடங்களை நிறைவுசெய்தேன்னு எனக்கே ஆச்சர்யம்!” கண்கள் விரியப் பேசுகிறார் சுஜாதா மோகன்.

“நான் பாடகியா உருவாக என் அம்மாதான் காரணம். என்னோட ரெண்டு வயசுல அப்பா இறந்துட்டார். அம்மாவுக்கு 26 வயசுதான். அம்மாவோட உலகமே நான்தான். அம்மா ஸ்கூல், காலேஜ் படிக்கும்போது பாட்டுப் போட்டிகளில் கலந்துக்குவாங்களாம். அழகா எனக்கு பாடிக்காட்டுவாங்க. அதுதான், எனக்குள்ள பாடக்கூடிய ஆர்வத்தைத் தூண்டிவிட்டது. முறைப்படி சங்கீதமும் கத்துக்கிட்டேன்.

யேசுதாஸ் அண்ணாவுடன் நான், ஜென்சி எல்லாம் நிறைய மேடைகளில் பாடியிருக்கோம். குரலுக்காக எப்படிப் பாராட்டு வாங்கினேனோ, நல்லா படிக்கிறதுக்காகவும் டீச்சர்ஸ்கிட்டே பாராட்டு வாங்கிடுவேன். படிப்புல எப்பவும் மெரிட்ல வந்தேன்.

எங்க குடும்பம் கட்டுப்பாடானது. சொந்தக்காரங்ககிட்டே ரொம்ப கண்டிஷன் இருந்தது. ஆனாலும், அம்மா எனக்கு சப்போர்ட்டிவா நின்னாங்க. கணவரை இழந்த எங்கம்மா வெளியில போகமுடியாத சூழல். ஆனா, நான் கச்சேரிகளுக்குப் பாடப் போகும்போது பாட்டியையும் சித்தியையும் துணையா அனுப்புவாங்க. இப்படி என் குடும்பமே ஆதரவா இருந்ததாலதான் பாடகி சுஜாதாவா உங்ககிட்டே பேசிட்டிருக்கேன். ‘பொண்ண பாட வெச்சு பணம் சம்பாதிக்கிறா’ன்னு யாராவது சொல்லிடுவாங்கன்னு எங்கம்மா கவலைப்பட்டாங்க. அதனால், நான் பாடின எந்தக் கச்சேரிக்கும் பணம் வாங்கினதே இல்ல.

என் முதல் பட வாய்ப்பு கிடைச்சது மலையாளத்துலதான்! பிரேம் நசீர் நடிச்ச ‘டூரிஸ்ட் பங்களா’ படத்தில் பாடறதுக்கு முதல்முறை சென்னை வந்தேன். சென்னை எனக்கு ஸ்பெஷல். இளையராஜா சார்தான் என்னை தமிழில் ‘கவிக்குயில்’ மூலமா அறிமுகப்படுத்தினார். அதுக்கப்புறம், ‘காயத்ரி’, ‘ஜானி’, படங்கள்ல பாடினேன்.

கேரளாவிலிருந்து சென்னைக்கு கூட்டிட்டு வர்றதுக்கு ஆள் இல்லாததால ராஜா சார் கொடுத்த பல வாய்ப்புகளை மிஸ் பண்ணினேன். அதுக்கப்புறம், எனக்குத் திருமணமாகி, இசைப் பயணத்துல சின்ன பிரேக் விழுந்தது. ஏன்னா, இரண்டு முறை கருவுற்றேன். இரண்டு முறையும் அபார்ஷனாகி கலங்கிட்டேன். ‘இனி குழந்தை பிறக்குமா, பிறக்காதா?’ன்னு பயம் வந்துடுச்சு. மூணாவதா கருவுற்றப்போ, 9 மாதங்கள் பெட் ரெஸ்ட் எடுத்து ஸ்வேதாவைப் பெற்றெடுத்தேன். என் வாழ்க்கையிலேயே நான் ரொம்ப சந்தோஷப்பட்ட தருணம் அது.

என் கணவர் ‘திரும்பவும் பாடு’ன்னு என்கரேஜ் பண்ணவேதான் பிரியதர்ஷன் சார் படத்துல பாடினேன். என் கணவர் டாக்டர்ங்கிறதால சென்னை அப்போலோவில் வேலை கிடைச்சு சென்னை வந்தோம். தமிழ்ல பழைய மாதிரி பாட வாய்ப்பு வரல. கோரஸ், ஜிங்கிள்ஸ்னு கிடைக்கிறதை பாசிட்டிவா எடுத்துட்டுப் பாடிக்கிட்டிருந்தேன்.

எனக்காக கடவுள் அனுப்பிய ‘ஏஞ்சல்கள்’ தாஸ் அண்ணா, பிரியதர்ஷன் சார், ஏ.ஆர். ரஹ்மான் சார். நான் கம்பேக் கொடுக்கக் காரணமே ஏ.ஆர்.ரஹ்மான் சார்தான். ‘காதல் ரோஜாவே’ பாட்டோட ஹம்மிங்கையும் என்னைப் பாடவெச்சார். அது மணிரத்னம் சாருக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. ‘புதுவெள்ளை மழை’ பாட வாய்ப்பு வந்துச்சு. பாடும்போதே அப்படியொரு சந்தோஷம். பாட்டும் பெரிய ஹிட். ரஹ்மான் சாருக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு ‘நேற்று இல்லாத மாற்றம்’தான். எந்தப் பாட்டு பாடினாலும் ‘நேற்று இல்லாத மாற்றம் ஃபீலில் பாடுங்க’ன்னு சொல்வார்.

ரஹ்மான் சார் பாடகர்களுக்கு ரொம்பவே சுதந்திரம் கொடுப்பார். எல்லோரும் பேமிலி மாதிரி இருந்தோம். மதியம் ஸ்டூடியோவில் ஒன்றாக சாப்பிடுவோம். நைட்டு லேட்டாச்சுன்னா ரஹ்மான் சாரோட அம்மா சமைச்சு உணவு அனுப்புவாங்க. என் 50-வது பிறந்தநாளுக்கு ஏ.ஆர். ரஹ்மான் சார்கிட்டேயிருந்து வாழ்த்து வந்திருந்தது. ரஹ்மான் சாரின் முதல் படத்திலிருந்து பாடுறேன். எதையுமே அவர் மறக்கலை.

நான் பாடின பாடல்களிலேயே ‘காற்றின் மொழி, ‘போறாளே பொன்னுத்தாயி’, ‘ஒரு இனிய மனது’ பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். கணவருக்கு ‘நேற்று இல்லாத மாற்றம்’ தான் ஃபேவரைட். ஸ்வேதா பாடல்களில் ‘யாருமில்லா தனிமையிலே’, ‘நீ கோரினால்’ என்னோட ஃபேவரைட்ஸ். என்னோட குரல் ரொம்ப பொருத்தமா இருக்குன்னு நினைக்கிற நடிகைகள் ரேவதியும் மீனாவும்தான். அதுவும், ‘மீனா பொண்ணு’, ‘தில்லானா தில்லானா’ பாடல்கள் பாடினப்போ அப்படியே மீனா பாடின மாதிரியே இருக்குன்னு நிறைய பேரு பாராட்டியிருக்காங்க.

எங்க குடும்பமே பெண்களால் ஆனது. அம்மாவுக்கு நான் ஒரே பொண்ணு. எனக்கு ஸ்வேதா ஒரே பொண்ணு. ஸ்வேதாவுக்கு ஒரு பெண் குழந்தை. `முதல்லயே பெண் குழந்தை பிறந்தால் அதுவே போதும்னு இருந்துடுவேன்!’னு ஸ்வேதா சொன்னா. அவளுக்குப் பிடிச்சமாதிரியே பெண் குழந்தை பிறந்துடுச்சு.

இப்போ பேத்திதான் எங்க உலகம். நான் சமைச்சாதான் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். என்னோட குடும்பம், ஸ்வேதாவோட மாமனார்–மாமியார்னு எல்லோரும் பக்கத்துல கூட்டுக்குடும்பமாத்தான் வசிக்கிறோம். பேத்திக்கு இரண்டு தாத்தா பாட்டிகளோட பேரன்பு கிடைக்குது. என்னோட அம்மாவும் என்கூடவே இருக்காங்க. பெண்கள்தான் இந்த உலகத்தோட சக்தி!” என்று உணர்வுபூர்வமாகப் பேசியவரிடம், “50 ஆண்டுக்கால இசைப்பயணத்தில் உங்களோட சாதனைன்னு எதை நினைக்கிறீங்க? தேசிய விருது கிடைக்கலங்கிற வருத்தம் இருக்கா?” என்று கேட்டோம்.

“தேசிய விருது கிடைக்கலைங்கிற வருத்தம் இருக்கு. மலையாளத்தில் ‘தட்டம் பிடிச்சி வலிக்கலே’ பாட்டுக்காக தேசிய விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கப்போற கடைசி சில மணிநேரத்துல வட இந்திய லாபியால இன்னொரு பாடகிக்குப் போச்சு. மலையாள இயக்குநர் சிபி மலயில் தேசிய விருது நடுவர் மன்ற உறுப்பினரா இருந்தார். சமீபத்திய பேட்டியில் அவர் சொன்னப்போதான் இது எனக்கே தெரியும். இப்படி ரெண்டு மூணு பாடல்கள். தேசிய விருது கிடைக்கலைன்னா என்ன? மக்கள் என்னை அங்கீகரிச்சுக்கிட்டே இருக்காங்க. இப்பக்கூட ‘லியோ’ படத்துல ‘தாமரைப் பூவுக்கும்’ பாடல் வைரல் ஆச்சு. மக்கள் முன்பைவிட அதிகமா என்னோட பாடல்களை நேசிக்கிறாங்க. அவங்களுக்காகவே நிறைய பாடணும்னு நினைக்கிறேன்!” என்கிறார், உற்சாகத் துள்ளலுடன்!

download (15)

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – ஐ.நா ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது

download (14)

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் சி.ஐ.டி விசாரணை ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத்

donald-trump

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன – ட்ரம்ப்!

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளை ஈரான் தனது அணு