இஸ்ரேல் தனது மிக மோசமான புதிய இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி உடனடியாக மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும் இல்லாவிடில் காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஐக்கிய ராச்சியம், பிரான்ஸ் மற்றும் கனடா திங்களன்று கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
காசாவிற்கு வழங்கப்படும் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் மட்டுப்படுத்தியுள்ளமையானது நியாயமற்றதென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
19 மாத போரின் தொடர்ச்சியாக இஸ்ரேல் வான் மற்றும் தரை வழியாக ஓர் பெரிய இராணுவ நடவடிக்கையை தொடங்கி காசாவின் இரண்டாவது பெரிய நகரமான Khan Younisஇல் இருந்து மக்களை வெளியேறுமாறு அறிவித்தல் விடுத்தது. இதனால் அந்தப் பகுதி இடிபாடுகளால் நிறைந்தது.
இந்நிலையில் 2023 ஒக்டோபர் 07 அன்று போரைத் தூண்டிய தாக்குதலில் கடத்தப்பட்ட மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸிற்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேலும், நீடித்த போர்நிறுத்தத்துடன் இஸ்ரேல் வெளியேறினால் மட்டுமே பணயக்கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸூம் தெரிவித்துள்ளது.
காசா மக்களை வேறு நாடுகளுக்கு குடிபெயர்வதை ஊக்குவித்து, மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றங்களை விரிவுபடுத்தும் எந்தவொரு முயற்சியையும் நாங்கள் எதிர்க்கிறோம் என்று மூன்று நாடுகளும் கூறியுள்ளதுடன் அவற்றை சட்டவிரோதமானவை என்றும் வர்ணித்துள்ளன. ஆனால் பயங்கரவாதத்திற்கு எதிராக Israel தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையை எப்போதும் ஆதரிப்பதாக அந்த நாடுகள் தெரிவித்தன.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸிற்கு இடையிலான மோதலில் மேற்குலக நாடுகளின் இக்கூட்டறிக்கையானது இஸ்ரேல் நடவடிக்கைகள் தொடர்பான மிக முக்கியமான விமர்சனங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.