பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக சுகாதார மற்றும வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், ஆளும் கட்சியின் முதற்கோலாசானுமான (வைத்தியர்) நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவுசெய்யப்பட்டார்.
இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் 2025 மே 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இத்தெரிவு இடம்பெற்றது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களும் இதில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார். இதில் பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரேஹாணதீர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) காவிந்த ஜயவர்தன இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல நூற்றாண்டுகளாக ஆழமாக வேரூன்றியுள்ள மற்றும் நீடித்துவரும் பரஸ்பர உறவுகளை இரு தரப்புப் பிரதிநிதிகளும் இங்கு சுட்டிக்காட்டினர். இரு நாடுகளுக்கும் இடையிலான பரிமாற்றத் திட்டங்கள் மற்றும் நிலைபேறான கலந்துரையாடல்கள் மூலம் பாராளுமன்ற ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.
மிகவும் சவாலான காலகட்டத்தில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்களுக்காக கௌரவ சபாநாயகர் நன்றியைத் தெரிவித்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் அண்மைய இந்திய விஜயத்தைச் சுட்டிக்காட்டிய சபாநாயகர், இது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்குப் புதிய வழிகளைத் திறப்பதற்கான மைல்கல்லாக அமைந்துள்ளது என்றார். இலங்கைப் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்காக இந்தியாவின் பாராளுமன்றக் கற்கைகள் மற்றும் பயிற்சிகள் பணியகத்தினால் திறன் அபிவிருத்தித் திட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமைக்கும் சபாநாயகர் இங்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய இலங்கை விஜயத்தை நினைவு கூர்ந்ததுடன், நெருங்கிய மற்றும் நம்பகமான அயல் நாடு என்ற ரீதியில் இலங்கைக்குப் பல துறைகளில் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட தலைவர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உரையாற்றுகையில், இரு பாராளுமன்றங்களுக்கும் இடையில் ஒரு பாலமாக நட்புறவு சங்கத்தின் முக்கிய பங்கை வலியுறுத்தியதுடன், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே ஏற்கனவே வலுவான உறவுகளை ஆழப்படுத்த அர்த்தமுள்ள உறவுகளை இதன் மூலம் மேம்படுத்த முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
இந்நிகழ்வில் நன்றியுரையாற்றிய நட்புறவு சங்கத்தின் செயலாளர் வைத்தியர் காவிந்த ஜயவர்த்தன, இந்தியாவின் நீடித்த நட்புக்கு அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.