பஹல்காம் தீவிரவாத தாக்குதல் காரணமாக எல்லையில் பதற்றம் அதிகரித்திருப்பதால், அட்டாரி – வாகா எல்லை வழியாக 786 பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க முடிவெடுத்துள்ள இந்திய மத்திய அரசு, இவ்விடயத்தில் இராணுவத்துக்கு முழு சுதந்திரத்தை வழங்கி உள்ளது. இதனால், எப்போது வேண்டுமானாலும் இராணுவம் தனது பதிலடி நடவடிக்கையை தொடங்கலாம் என கூறப்படுகிறது.
இந்தியா அடுத்த 24-36 மணி நேரத்தில் இராணுவ நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக “நம்பகமான உளவுத்துறை” தகவல்களை மேற்கோள் காட்டி பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஏப்ரல் 24 ஆம் திகதி தொடங்கி ஆறு நாட்களுக்குள் 786 பாகிஸ்தானியர்கள் அட்டாரி-வாகா எல்லை வழியாக இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர். அதே நேரத்தில், பாகிஸ்தானிலிருந்து அட்டாரி-வாகா எல்லை வழியாக மொத்தம் 1376 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
“பாகிஸ்தானுக்கு நேரடி விமானம் இல்லாததால், டுபாய் அல்லது பிற வழித்தடங்கள் வழியாக பலர் விமானம் மூலம் வெளியேறியுள்ளனர். மாநில பொலிஸ் மற்றும் பிற மத்திய நிறுவனங்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டினரை அடையாளம் கண்டு வருவதால், அதிகமான பாகிஸ்தான் நாட்டினர் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.