தென் கொரியாவின் ஜியொஞ்சு, ஹுவாசென் ஜிம்னாசிய உள்ளக அரங்கில் வெள்ளிக்கிழமை (04) நிறைவுபெற்ற ஆசிய கனிஷ்ட வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இலங்கை 3ஆம் இடத்தைப் பெற்றது.
பிரதான கிண்ணத்துக்கான குழுவில் இடம்பெற்ற இலங்கை, இன்று நடைபெற்ற தீர்மானம் மிக்க (Play off) போட்டியில் ஹொங்கொங்கை கடும் சவாலுக்கு மத்தியில் 51 – 43 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டு இலங்கை மூன்றாம் இடத்தைப் பெற்றது.
31 வருட ஆசிய கனிஷ்ட வலைபந்தாட்ட வரலாற்றில் இந்த வருடம் முதல் தடவையாக ஆசிய கனிஷ்ட வலைபந்தாட்ட சம்பயின்ஷிப் பிரதான கிண்ணத்துக்காகவும் கோப்பைக்காகவும் விளையாடப்பட்டது.
ஆசிய வலைபந்தாட்ட தரவரிசையில் முதல் ஐந்து இடங்களில் உள்ள நாடுகள் பிரதான கிண்ணத்துக்காகவும் மற்றைய 6 நாடுகள் கோப்பைக்காகவும் மோதின.
பிரதான பிரிவில் நடப்பு சம்பியன் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஹொங்கொங், இந்தியா ஆகிய ஐந்து நாடுகள் பங்குபற்றின.
முதல் சுற்றில் ஹொங்கொங்கை 50 – 31 (11 – 8, 13 – 6, 15 – 8, 11 – 9) எனவும் இந்தியாவை 71 – 30 (15 – 8, 17 – 9, 21 – 7, 18 – 6) எனவும் இலங்கை இலகுவாக வெற்றிகொண்டது.
எனினும் 3ஆவது போட்டியில் மலேசியாவிடம் 40 – 62 (10 – 14, 9 – 11, 8 – 21, 13 – 16) எனவும் கடைசி லீக் போட்டியில் சிங்கப்பூரிடம் 19 – 62 (3 – 16, 4 – 14, 4 – 16, 8 – 16) எனவும் இலங்கை தோல்வி அடைந்தது.
முதல் சுற்று முடிவில் அணிகள் நிலையில் முதலிடம் வகித்த சிங்கப்பூர் நேரடியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
இரண்டாம் இடத்தைப் பெற்ற மலேசியாவும் மூன்றாம் இடத்தைப் பெற்ற இலங்கையும் அரை இறுதிப் போட்டியில் மீண்டும் சந்தித்தன.
அரை இறுதிப் போட்டியில் மலேசியா 62 – 31 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற மூன்றாம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் ஹொங்கொங்கிடம் கடும் சவாலை எதிர்கொண்ட இலங்கை 51 – 43 (10 – 9, 14 – 11, 14 – 12, 13 – 11) என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டு 3ஆம் இடத்தைப் பெற்றது.
முதல் சுற்றில் ஹொங்கொங்கை 19 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட இலங்கை 3ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் 8 கோல்கள் வித்தியாசத்திலேயே வெற்றிகொண்டுள்ளது.
இறுதிப் போட்டியில் சிங்கப்பூரை 49 – 45 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட மலேசியா 8ஆவது தடவையாக ஆசிய கனிஷ்ட வலைபந்தாட்ட சம்பியனானது.