ஐ.பி.எல் தொடரின் 36ஆவது லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ரோயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் போட்டியில் லக்னோ அணி 180 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ராஜஸ்தான் 178 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றி பெற்றது.
இதற்கிடையே, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி இம்பேக்ட் பிளேயர் அடிப்படையில் தொடக்க வீரராக களமிறங்கினார். இதன்மூலம் ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறைந்த வயதில் களம் இறங்கிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். சூர்யவன்ஷி 14 வயது 23 நாட்களில் அறிமுகம் ஆகியுள்ளார்.
மேலும், வைபவ் சூர்யவன்ஷி தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் விளாசி புதிய சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் 20 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட மொத்தம் 34 ஓட்டங்கள் எடுத்து ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.
அறிமுகப் போட்டியிலேயே அபாரமாக விளையாடிய 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷியை லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.
அத்தோடு அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷியை புகழ்ந்து கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், “ஐ.பி.எல் தொடரில் 8 ஆம் வகுப்பு மாணவனின் ஆட்டத்தைப் பார்ப்பதற்காக கண் விழித்தேன். என்ன ஒரு அறிமுக ஆட்டம்!” என்று பதிவிட்டுள்ளார்.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ரோயல்ஸ் 1.10 கோடி இந்திய ரூபாவுக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.