மட்டக்களப்பை கவர்ச்சிகரமான சுற்றுலா மாவட்டமாக மாறுவதற்கும், மேலும் அதிக சுற்றுலா ஈர்ப்பை பெறுவதற்கும், இந்த மாவட்டத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்துவது,மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது உள்ளிட்ட திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.
அவரது பேஸ்புக் பக்கத்தில் இந்த விடயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் தொடர்பான தற்போதைய பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கான விசேட மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதன்போது போக்குவரத்து வசதிகளை மேம்ப்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டன.
இலங்கையை ஒரு ஒருமித்தமான நாடாகவும், அபிவிருத்தியடைந்த ஒரு நாகரீக நாடாகவும் முன்னேற, இன, மத பேதமின்றி இலங்கையர்களாக செயல்படுவது நம்மில் ஒவ்வொருவரின் பொறுப்பாகும்.
அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என அவர் பதிவிட்டுள்ளார்.
குறித்த கலந்துரையாடலுக்குப் பின்னர், அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி ஆகியோர் மட்டக்களப்பு டிப்போ வளாகத்தினை பார்வையிட்டனர்.
அப்போது சேவையிலிருந்து நீக்கப்பட்டு பழுது பார்க்கப்பட்ட சில பேருந்துகள் மீண்டும் உத்தியோக பூர்வமாக கையளித்தனர்.
இது எதிர்காலத்தில் பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு நிலையான தீர்வாக அமையும் என நாங்கள் நம்புகிறோம் என இதன்போது அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.